articles

img

ஆளுநர்களை நியமிக்க மாநிலங்களுக்கு அதிகாரம்!- ச.வீரமணி

புதுதில்லி, டிச.9- மக்களின் விருப்பத்திற்கு மதிப்ப ளிக்கும் வகையில், ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநி லங்களுக்கு வழங்க அரசியல மைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்  கொள்ளும் வகையில், தனிநபர் மசோதா ஒன்றை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.வி. சிவ தாசன், வெள்ளியன்று (டிச.8) மாநி லங்களவையில் தாக்கல் செய்தார்.

“அரசியலமைப்புச் சட்டத் திருத்த (பிரிவு 153 மற்றும் 155, 156-இன் துணைப்பிரிவுகள் திருத்தம்) மசோதா-2022” என்ற பெயரிலான இந்த மசோதாவை அறிமுகம் செய்து மாநிலங்களவையில் பேசிய டாக்டர் ஆர்.வி. சிவதாசன், தனது மசோதாவுக்கு ஆதரவளிக்குமாறு, மாநிலங்களவையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டார்.

தனிநபர் மசோதாவை அறி முகப்படுத்தி டாக்டர் சிவதாசன் ஆற்  றிய உரை வருமாறு:

2022ஆம் ஆண்டு அரசமைப்புத் திருத்தச் சட்டமுன்வடிவு (153ஆவது  பிரிவு திருத்தம், 155 மற்றும் 156ஆவது பிரிவுகள் சேர்க்கை) ஆகியவை தொடர்பான இந்தச் சட்டமுன்வடிவு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

பொது நலன் கருதி, ஆளுநரின் பதவி, ஒன்றிய அரசாங்கத்தின் அறி வுரையின்பேரில் குடியரசுத் தலை வரால் நிரப்பப்படக்கூடாது, மாறாக  சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்  தால் ஆளுநர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதற்கான சட்டமுன்  வடிவு இதுவாகும்.

மக்களின் விருப்பத்திற்கு மதிப்ப ளித்திட வேண்டும். ஆளுநர்கள், ஒன்  றிய அரசின் கையாட்களாக செயல் பட முடியாது. இன்றைய தினம் பல  மாநிலங்களில், பாஜக ஆளாத மாநி லங்களில், ஆளுநர்கள் மாநில அர சாங்கத்திற்குள் ஊடுருவும் ஒன்  றிய அரசாங்கத்தின் கருவிகளாக  செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற னர். இதற்கு எண்ணற்ற எடுத்துக் காட்டுகளை நம்மால் அளித்திட முடியும்.

‘மாநிலங்களின் ஒன்றியம்’
அரசமைப்புச்சட்டத்தின் 1ஆவது  பிரிவு, “இந்தியா, அதாவது பாரதம்  என்பது மாநிலங்களின் ஒன்றியம்”  என்றுதான் தொடங்குகிறது. இந்த  வாசகம், மாநிலங்களின் முக்கியத்து வத்தை மெய்ப்பிக்கிறது. கூட்டாட் சித் தத்துவம் என்பது நம் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பாகும். நம்  அரசமைப்புச் சட்டத்தின் அடிப்ப டைக் கட்டமைப்பாகும். இந்தியா என்பது ‘வேற்றுமையில் ஒற்றுமை  காணும்’ (‘unity in diversity’)  என்னும் அடிப்படைக் குணாம்சத் தின் அடிப்படையிலேயே மாபெரும் தேசமாக உருவாகியிருக்கிறது என்  பது நம் அனைவருக்கும் தெரியும்.  இந்த வேற்றுமையில் ஒற்றுமை  காணும் பண்பு ஒழித்துக்கட்டப்பட் டால், மக்களின் பெரும்பான்மை யினர் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படு வார்கள். இதன் பொருள், அவர்கள் தங்கள் அடையாளங்களை, மொழியை, கலாச்சாரத்தை, பழக்க வழக்கங்களை இழப்பார்கள். இது வளர்ச்சிக்கு உதவாது. 

விடுதலை வீரர்களின் ரத்தத்தால்...
‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் பண்பு நம் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையாகும். இவ்வாறு தான் நம் ஒற்றுமை வளர்த்தெடுக்கப்பட்டு, வலுப் படுத்தப்படும். பல்வேறுபட்ட மக்க ளிடமும் அன்பு, பாசம், நேசம்,  மதிப்பு, மரியாதை செலுத்தப்படு வதன் மூலம்தான் இந்தியா என்னும் மாநிலங்களின் ஒன்றியம் கட்டி எழுப்  பப்பட்டுள்ளது. மாறாக இது, செங் கற்களாலோ அல்லது துப்பாக்கி குண்டுகளாலோ கட்டப்பட்டதல்ல. பல லட்சக்கணக்கான விடுதலைப்  போராட்ட வீரர்களின் போராட்டத் தால், தொழிலாளர்கள் சிந்திய ரத்  தத்தால், விவசாயிகள் சிந்திய ரத்தத்தால் இந்த நாடு கட்டி எழுப் பப்பட்டதாகும். அவர்கள் பல்வேறு சிந்தனைகள் உடையவர்களாக இருக்கலாம், பல்வேறு மதங்க ளைச் சேர்ந்தவர்களாக இருக்க லாம், பல்வேறு மொழி பேசுபவர் களாக இருக்கலாம், பல்வேறு சிந்தனையாளர்களாக இருக்கலாம், பல்வேறு அடையாளங்களைக் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக,  இவர்கள் அனைவருமே மனித குலத்தின் விழுமியங்கள் மீது ஆழ மான பிடிப்பினைப் பெற்றிருக்கிறார் கள்.

கூட்டாட்சித் தத்துவமே அடிப்படை

ஆனால், இப்போது இங்கே நாம்  என்ன பார்க்கிறோம்? மாநிலங்களின்  உரிமைகள் ஒன்றிய அரசாங்கத்தால்  நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வரு கின்றன. மாநிலங்களின் உரிமைகள் மட்டுமல்ல, மாநிலங்களவையின் உரிமைகளும், அதிகாரங்களும் கூட  குறைக்கப்பட்டு வருகின்றன. மாநி லங்களின் உரிமைகளை, மாநிலங்க ளவை உறுப்பினர்கள் என்ற முறை யில் நாம் பாதுகாத்திடத் தவறுவோ மானால், பின், கூட்டாட்சித் தத்துவத்  தின் மாபெரும் விழுமியங்கள் ஆட்சியாளர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுவிடும்.

உலக வரலாறு நமக்கு எதனை நினைவு படுத்துகிறது? உலகில் ஆட்சி செய்த சர்வாதி காரிகள் அனைவருமே மக்கள் மத்தியில் காணப்பட்ட வேற்றுமைப் பண்புகள் மீது தாக்கு தலைத் தொடுத்தவர்கள்தான், தங்கள் ஒற்றைக் கலாச்சாரத்தை (monolithic culture) இதர பகுதி மக்கள் மீது திணித்திட தங்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள். இத்தாலி, ஜெர்மனி போன்ற பல நாடுகளின் அனு பவம் இதனை வெளிப்படுத்தி இருக்கிறது. மக்களின் பிரதிநிதிகளாகிய நாம், இந்தி யாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் பிரதி நிதிகளாகிய நாம், இவ்வாறு மக்களின் வேற்று மைப் பண்புகள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதல் களை எதிர்த்திட, மாநிலங்களின் உரிமைகள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதல்களை முறிய டித்திட, ஒன்றிய அரசாங்கத்தின் ஜனநாயக மற்ற நடைமுறைகளை எதிர்த்து முறியடித்திட முன்வர வேண்டும்.

பிரித்தாளும் தந்திரத்தைக் கையாளும் கார்ப்பரேட்டுகள் 

இந்தியாவில் நாம் எண்ணற்ற அடையா ளங்களைப் பெற்றிருக்கிறோம். இதுவே நம் பலம். சகிப்பின்மைக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றே  நம் மகத்தான முன் னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வங்கத்தை மேற்கு வங்கம் என்றும், கிழக்கு வங்கம் என்றும் பிரித்தபோது, வங்க மக்கள் ஒன்று பட்டு நின்று, இதற்கெதிராகப் போராடினார்கள். இறுதியில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒன்றுபட்ட மக்களின் மகத்தான போராட்டத்தின் முன் சரணடைந்தது. 

இன்றைய காலனியாதிக்கத்தின் தலைவர் கள், பெரும் கார்ப்பரேட்டுகள், அவர்களின் பிர தான எதிரிகளில் முக்கியமானது, மக்களிடம் காணப்படும் ஒற்றுமைதான் என்று அடையா ளம் கண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஆளும் வர்க்கம் அதே காலனியாதிக்க காலத்தின் கொள்கையை- பிரித்தாளும் சூழ்ச்சியை, இப்போதும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.  

மாநில அரசாங்கங்கள் எப்போதெல்லாம் மதச்சார்பின்மைக் கொள்கையை உயர்த்திப் பிடித்திட நடவடிக்கைகள் எடுக்கின்றனவோ, அப்போதெல்லாம் அங்கே ஆளுநர்கள், வெறுப்பு அரசியலைப்பரப்பிட முயற்சிக்கி றார்கள். கேரள சட்டமன்றம், குடிமக்கள் தேசியப் பதிவேட்டிற்கு எதிராக ஒரு தீர்மானம் நிறை வேற்றியதை, அதன் மூலம் நாட்டின் மதச்சார் பின்மை விழுமியங்களை உயர்த்திப்பிடித்திட நடவடிக்கை எடுத்ததை அனைவரும் அறி வோம்.

மாநில அதிகாரங்களைக்கைப்பற்ற முயற்சி 
அதிகாரப் பரவல் என்பது அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாகும். இது நம் நாட்டின் குணாம்சத்தின் ஒரு பகுதியாகும். அதிகாரங்கள் ஒன்றிய அரசாங்கத்திற்கும், மாநிலங்களுக்கும் இடையே பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இப்போது நாளுக்கு நாள் மாநிலங்களின் அதிகாரங்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகின்றன. (இங்கே சில வாசகங்கள் அவைத் தலைவரின் ஆணைப்படி நீக்கப்பட்டி ருக்கிறது.) மாநில அரசுகளின் அதிகாரங்க ளைக் கைப்பற்ற ஒன்றிய அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, ஆளுநர் ஒன்றிய அரசாங்கத்தின் திட்டத்தை அமல்படுத்திடும் ஒரு கருவியாக மாறியிருக்கிறார்.  மாநிலங்களின் அதிகாரங்களை ஒன்றிய அரசாங்கம் எடுத்துக்கொண்டு வருவதற்கு ‘கல்வி’ மற்றும் ‘வனம்’ என்பவை சிறந்த எடுத்துக்காட்டுக ளாகும். இவை இரண்டும் மாநிலப் பட்டியலில் உள்ளவை. எனினும், இவை இரண்டும் இப்போது ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் இருக்கின்றன. இதேபோன்றே, ‘விவசாயம்’ முன்பே மாநிலங்களின் கைகளில் இருந்தது. ஆனால், இதிலும் ஒன்றிய அரசாங்கம் ஊடு ருவி வருவது இப்போது நடந்து கொண்டி ருக்கிறது. ‘அணைகள்’ மற்றும் ‘நீர் மின்திட்டங்கள்’ முதலானவையிலும் மாநிலங்க ளின் உரிமைகளை, ஒன்றிய அரசாங்கம் கைப்பற்றி இருக்கிறது. இத்தகைய தலையீடுக ளுக்கு எதிராக மாநில அரசாங்கங்கள் குரல் எழுப்பி வருகின்றன. ஆயினும், சில ஆளுநர் கள் மாநில அரசுகளின் செயல்பாடுகளை வெளிப்படையாகவே விமர்சனம் செய்து வருகிறார்கள். இது, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசாங்கத்திற்கும் நியமனம் செய்யப்பட்ட ஆளுநருக்கும் இடையே யான இடைவெளியை விரிவு படுத்தியி ருக்கிறது. மாநில மக்கள் தங்களுக்கு அதிக  சுயாட்சி வேண்டும் என்று கேட்டுக்கொண்டி ருக்கிறார்கள். ஆனாலும், ஒன்றிய அரசாங்கம் ஆளுநர்கள் மூலமாக தங்கள் அதிகாரங்க ளைச் செலுத்திட முயற்சித்துக் கொண்டி ருக்கிறது. 

உரிமைப் போராட்டம் 
கேரளம், தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் பல்வேறு வழிகளில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டி ருக்கின்றன. இந்த மாநிலங்களின் பிரதிநிதி கள் இங்கே வீற்றிருக்கிறார்கள். இம்மாநிலங்க ளில் உள்ள ஆளுநர்கள் பின்பற்றிவரும் அணுகு முறையை அருள்கூர்ந்து பாருங்கள். அவர்கள் தங்கள் மாநிலங்களின் நலன்களுக்கு எதி ராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அதிகாரங்கள் மையப்படுத்துதலுக்கு எதிராக மாநில அரசுகள் போராடி வருகின்றன. அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என அவை கோரி வருகின்றன. இது நாட்டின் ஜனநாயக இயக்கத்தின் மிகவும் முக்கியமான ஓர் அம்சமாகும். மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்று கோரும்போது, ராஜ் பவன்களுக்கு சுயாட்சி வேண்டும் என்று கோருவதாகப் பொருள்கொள்ளக் கூடாது. இவை சரிசெய்யப்பட வேண்டும்.

ஆளுநர்கள், மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு இசைவு தராமல் நிறுத்தி வைத்துக் கொண்டி ருக்கிறார்கள். பொதுப் பட்டியல் அல்லது எஞ்சிய அதிகாரங்கள் (concurrent list or residuary powers) என்ற பெயரில் ஆளுநர்கள் இதனைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய அரசாங்கம், எஞ்சிய அதிகாரங்களை மாநிலங்களுக்கு அளித்திடத் தயாராக இல்லை.

விவசாயத் துறையில், ஒன்றிய அரசாங்கம் புதிதாக சட்டங்களை இயற்றியது.  ஆனால், இதற்கெதிராக மாபெரும் போராட்டம் நடந்ததை அடுத்து அவை விலக்கிக் கொள்ளப் பட்டன. 800 விவசாயிகளுக்கும் மேலாக இப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிரைப் பலி கொடுத்தபின் இந்தச் சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

ஆளுநருக்கு அதிகாரமில்லை
ஆளுநர்கள் பலசமயங்களில் மாநில அரசாங்கங்களின் நடவடிக்கைகளை விமர்ச னம் செய்கிறார்கள். சில மாநிலங்களில் ஒன்றிய அரசாங்கத்தால் கொண்டுவரப் பட்டுள்ள மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனினும், மாநிலத்தில் பெயரளவில் தலை வராக உள்ளவர் (titular head of the state), மாநிலத்தின் நலன்கள் மற்றும் விவசா யிகளின் நலன்களுக்கு எதிராக நிலைப் பாட்டினை எடுக்கிறார். மாநிலத்தின் தலைமை (Head of the State) என்பதற்கு என்ன பொருள்? 

அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி அமைப்பு முறையும், அரசமைப்புச் சட்டத்தின் மாபெரும் விழுமியங்களும் ஒன்றிய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் பலவற்றால் அடித்து நொறுக் கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கல்வித்துறை யில், மாநில அரசாங்கங்கள் எண்ணற்ற பிரச்ச னைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். கல்வித்துறையை மிகவும் மையப்படுத்த வேண்டும் என்பதே ஒன்றிய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்பதை அனைவரும் அறி வோம்.

நீட் பிரச்சனை தொடர்கிறது. தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இங்கே இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசாங்கம் இதற்கெதிராக உறுதி யான நிலைப்பாட்டினை எடுத்திருக்கிறது. சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. ஆயினும் ஆளுநர் மாநில அரசாங்கத்தை வெளிப்படையாகவே விமர்சனம் செய்தி ருக்கிறார்.

கையெழுத்திட மறுப்பது அராஜகம்
மாநில அரசாங்கங்களின் வருவாய் மற்றும் ஆளுநர்களின் பங்கு குறித்து இங்கே விவாதிக்கப்பட வேண்டும். ஏன்? இது மிகவும் முக்கியமான விஷயமாகும். மாநிலங்களின் வருவாயைப் பொறுத்தவரை, பல மாநிலங்க ளில் அங்கேயுள்ள ஆளுநர்கள் அநாவசிய மாகத் தலையிடுவதன் காரணமாக எண்ணற்ற பிரச்சனைகளை அவை எதிர்கொள்கின்றன. ஓர் ஆளுநர், மாநில அரசாங்கம் தயாரித்துள்ள பட்ஜெட்டில் கையெழுத்திட மாட்டேன் என்று வெளிப்படையாகவே கூறுகிறார். இது மாநிலத்தில் ஓர் அசௌகரியமான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநரின் கடமை என்பது, அம்மாநில அமைச்சரவை அளித்தி டும் அறிவுரைக்கு இணங்க செயல்படுவது என்பதேயாகும். (The duty of the Governor is to follow the advice of the Cabinet.) இப்பதவியை அலங்கரித்த புத்திசாலிகள் அப்படித்தான் வேலை செய்தார்கள்.

தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய காலத்தில் மாநில அரசுகளின் நிதி நிலை மையில் கடுமையான சரிவு ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான மாநிலங்கள் நிதி நெருக்க டியை சந்தித்து வருகின்றன. இதனைச் சரி செய்திட பல மாநில அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள். ஆனால் அங்கேயுள்ள ஆளுநர்கள் அதற்குத் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜிஎஸ்டி, மாநிலங்கள் வரி விதிக்கும் உரிமைகளைப் பறித்துக் கொண்டுவிட்டது.

மாநிலங்களுக்கு தண்டச் செலவு
ஒன்றிய அரசாங்கம், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது என்பது கருணையல்ல. இது மாநிலங்களின் உரிமை. எனவே, ஒன்றிய அரசாங்கம், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக எவ்விதமான சீர்திருத்தங்களையும் இணைத்திடக் கூடாது. ஆளுநர்கள், மாநிலங்களின் நிதிச் சுயாட்சியுடன் (financial autonomy) இணைந்து நிற்க வேண்டும். ஆளுநர்களால் மாநிலங்கள் மீது ஏற்றப்படும் நிதிச் சுமை விவாதிக்கப்பட வேண்டும். மாநில அரசுகளின் நிதி நெருக்கடியும், ஆளுநர்களின் செலவுகளும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

சில ஆளுநர் மாளிகை (ராஜ் பவன்கள்)-களின் ஆண்டு செலவினம் 30 மடங்கிற்கும் அதிகமாகும். தகவல் கோரும் உரிமைச் சட்டத்தின்கீழ்பெறப்பட்ட ஒரு பதிலில், மகாராஷ்டிர அரசாங்கத்தின் ஆளுநர் இரு ஆண்டுகளுக்கு செலவுசெய்த தொகை 60 கோடி ரூபாய்களாகும். இது ஒன்றிய அர சாங்கம் தேசிய நூலகங்கள் மிஷனுக்கு ஒதுக்கிய தொகையைப்போல் பத்து மடங்கா கும். தற்போது, மாநில ஆளுநர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் செலவுகளைச் செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பொறுப்பாகும்.

ஆளுநர்கள் ஒன்றிய அரசாங்கத்தால் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்காகும் செலவுகளை மாநில அர சாங்கம் அளித்திட வேண்டும். இது பகுத்தறி வுக்கு விரோதமாக இருக்கிறது. இதனை ஒன்றிய அரசாங்கம்தான் அளித்திட வேண்டும். ஆளுநர்களுக்கு அளிக்கப்படும் செலவு களுக்காகும் சுமை, மாநில அரசுகளுக்கு மாற்றப்படுகிறது.

எதற்கு நான்கு மாளிகைகள்?
ஆளுநர் மாளிகைகள் என்பவை காலனி யாதிக்க காலத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. ஆளுநர் மாளிகைகள் பல, ஆளுநர்களின் இருப்பிடமாக மட்டுமல்ல, அவர்களின் மனமகிழ் இல்லங்களாகவும் இருக்கின்றன. மும்பை, நாக்பூர், புனே மற்றும் மகாபலேஸ்வர் என நான்கு ஆளுநர் மாளி கைகள் மகாராஷ்டிராவில் இருக்கின்றன. ஒரே மாநிலத்தில் உள்ள ஒரேயொரு ஆளுநருக்கு நான்கு ஆளுநர் மாளிகைகள். இது தேவை தானா? இத்தகு நடைமுறையை ஏன் இப்போ தும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்? உத்தர் கண்ட் மாநிலத்தில் டேராடூன் மற்றும் நைனிடால் என இரு ஆளுநர் மாளிகைகள். நைனிடால் ஆளுநர் மாளிகை சுமார் 220  ஏக்கர் நிலத்தில் அமைந்திருக்கிறது. அதில் 45 ஏக்கர் கோல்ப் மைதானமும் அடங்கியி ருக்கிறது.

தமிழ்நாட்டில் இரு ஆளுநர் மாளிகைகள். சென்னை ஆளுநர் மாளிகை 156 ஏக்கரில் அமைந்திருக்கிறது. மற்றொன்று ஊட்டியில் அமைந்திருக்கிறது. இது சுற்றுலாத் தலமாகும். ஆளுநர் என்பவர் ஒரு சுற்றுலாப் பயணியா? ஒன்று குளிர்கால மாளிகையாம், மற்றொன்று கோடைக்கால மாளிகையாம்.

இவ்வாறு ஒன்றிய அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆளுநர் கள், மாநில அரசாங்கங்களின் செயல்பாடு களில் தடைகளை உருவாக்கிக் கொண்டி ருக்கிறார்கள். இத்தடைகளை அகற்றிட அனைத்து உறுப்பினர்களும் உரிய நடவ டிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும், ஆளுநர்களின் தவறான நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும், நம் நாட்டில் காலனியாதிக்க நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட முயற்சிக்க வேண்டும். மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு டாக்டர் சிவதாசன் பேசினார்.